வியாழன், 10 அக்டோபர், 2024

காவல்காரர்

சட்டை மேலே கோட்டு மாட்டி 

சரிகை போட்ட வேட்டி கட்டி 

நட்ட நடுவே தோட்டம் தன்னில் 

ராஜா போல நின்றி ருந்தார் 


இரவும் பகலும் தூங்கி டாமல் 

இங்கு மங்கும் நகர்ந்தி டாமல் 

பெருமை யோடு காவல் காப்பார் 

பெயரில் லாத காவல் காரர் 


காக்கை குருவி அங்கே வந்தால் 

காவல் காரர் நிற்கக் கண்டு 

சீக்கி ரத்தில்  வந்த வழியே 

திரும்பி ஓடும் பயந்து கொண்டு 


காற்று பலமாய் அடித்த

தாலே 

கனத்த மழையும் பெய்த தாலே 

நேர்த்தி யான அவரின் உடைகள் 

நித்தம் கிழிந்து வந்த தையோ 


இதனைக் கண்ட காகம் ஒன்று 

இந்தச் சமயம் இவருக்கு நாமும் 

உதவி செய்தால் பயமில் லாமல் 

உலவ லாமே என்று கருதி 


அருகி லுள்ள வீட்டிற் குள்ளே  

யாரும் இல்லா வேளை சென்று 

கறுப்புக் கோட்டு வெள்ளைச் சட்டை 

கட்டிக் கொள்ள சரிகை வேட்டி 


எடுத்து வந்து காவல் காரர் 

இருக்கும் இடத்தில் போட்டு விட்டே 

உடுத்திக் கொள்வீர் என்று சொல்லி 

ஒதுங்கி நின்று பார்த்த தங்கே 


காவல் காரர் பழைய உடையை 

கழற்றிக் கீழே போட வில்லை 

ஆவ லோடு புதிய உடையை 

அணிய வில்லை அசைய வில்லை 

உடனே காகம் அருகில் சென்றே 

உற்று நன்றாய் பார்த்த பின்னர் 

அடடே இந்தக் காவல் காரர் 

யாரோ என்று நினைத்தி ருந்தேன் 

வைக்கோல் மேலே துணியைச் சுற்றி 

வைத்தி ருக்கும் பொம்மை என்றே 

இக் கணத்தே நண்பர் அறிய 

எடுத்துச் சொல்வேன் என்று கூறி 


காவல் காக்கும் பொம்மை தலையில் 

காலை வைத்து நின்று கொண்டு 

கூவி அழைத்து   பறவை யாவும் 

கூடச் செய்து விட்ட தங்கே .

-அழ. வள்ளியப்பா 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக